இணைந்துக் கொள்ளுங்கள்

TELEGRAM : CLICK HERE

WhatsApp CLICK HERE

சங்க இலக்கியம் -02 | செம்மொழித் தமிழ் கோட்பாடுகள் |

 

·         செம்மொழி அல்லது செவ்வியல் என்னும் பெருமை பெற்றது தமிழ்மொழி. செவ்வியல் என்பதற்குத் தி.சு. நடராசன் கூறுவது குறிப்பிடத்தக்கது.

·         செவ்வியல் (Classicism) என்பது. காலத்தின் தொன்மையையும் பண்டை மரபு மற்றும் இலக்கியல் போக்குகளின் குறிப்பிட்ட சில பண்புகளையும் குறிக்கின்றது. அது, இலக்கியச் செல்நெறி சார்ந்த ஒரு கோட்பாடு, சங்க காலம், செவ்வியல் காலம் என்றும் சங்க கால மரபு. செவ்வியல் மரபு என்றும் சங்க இலக்கியம், செவ்வியல் இலக்கியம் என்று வருணிக்கப்படுகின்றன.

·         உலகச் செவ்வியல் மொழிகள் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த மொழிகள் பல செவ்வியல் மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய மைய அரசின் பட்டியலில் வடமொழி எனப்படும் சமஸ்கிருதம் (Sanskrit) பிராகிருதம், பாலி, அரேபியம், பாரசீகம் என்னும் மொழிகள் செம்மொழிகளாகக் காணப்படுகின்றன.

 

·         12-04-2004 ஆண்டில் மைய அரசு அறிவித்ததன் விளைவாகத் தமிழ் மொழியும் செம்மொழி (Classical language) என்னும் தகுதிப்பாட்டை அடைந்துள்ளது. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளையும் செம்மொழிகளாக அறிவித்துள்ளார்கள்.

·         கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு, சீனம் போன்ற பிற நாட்டு மொழிகளும் செவ்வியல் மொழிகளாக இனங்கண்டு அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மொழியைச் செம்மொழியாகக் கொள்ள வேண்டுமாயின் பின்வரும் பத்து வகையான தகுதிப்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும் என அறிஞர்கள் குறிப்பிடுவர்.

 

1. தொன்மை (Antiquity)

2. தனித்தன்மை (Individuality)

3. பொதுத் தன்மை (Common Character)

4. நடுவு நிலைமை (Neutrality)

5. தாய்மைத் தன்மை (Parental Kinship)

6. பண்பாடு - கலை (Culture and Arts)

7. பிறமொழித் தாக்கம் இல்லாத் தனித்தன்மை

8. இலக்கிய வளம் (Liberary prowers)

9. உயர் சிந்தனை (Nolbe ideals and thought)

10. பொதுமொழிக் கோட்பாடு (Linguistic principles)

 

1. தொன்மை

·         உலகில் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ள எந்த மொழியையும் விடத் தமிழ் தொன்மையில் குறைந்தன்று. தொன்மைக்காலத்தில் இந்தியாவின் தென்கோடியிலிருந்து வடகோடி வரை தமிழின் மூலமொழியான திராவிட மொழியே பேசப்பட்டதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். இப்போதுள்ள குமரி முனைக்குத்தெற்கே நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் தொலைவுக்குப் பழந்தமிழகம் நிலப் பகுதியாக இருந்தது என்றும் அது கடல் கோளால் அழிந்து விட்டது என்றும் குறிப்பிடுகின்றார்கள்.

·         குமரிக் கண்டம் அல்லது இலெமூரியாக் கண்டம் எனக் குறிக்கப்படும் அப்பகுதியில் குமரி ஆறு, பஃறுளி ஆறு என்பவை ஓடினவாம். அக்காலத்தில் ஆப்பிரிக்கா கண்டம், ஆஸ்திரேலியக் கண்டம் என்பவையும் இந்தியாவும் ஒரே நிலப் பகுதியாகவும் இருந்தனவாம்.

 

·         மேலும் மொகஞ்சதரோ - ஹரப்பா எனப்படும் சிந்து வெளி நாகரிகம் பழந்தமிழரின் நாகரிகமாகக் கருதப்படுகின்றது. பாகிஸ்தானில் பிராகூயி (Brahui) என்றொரு திராவிட மொழி இன்றும் பேசப்படுகின்றது.

·         உலக மனித இனமே கடல் கோளால் அழிந்த குமரிக் கண்டம் பகுதியிலிருந்தே உலகெங்கிலும் பரவியதாகக் குறிப்பர். எனவே செம்மொழித் தமிழ் உலக மொழிகள் எல்லாவற்றையும் விடத்தொன்மை வாய்ந்ததாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

 

2. தனித்தன்மை

 

·         ஒவ்வொரு மொழிக்கும் சில தனித் தன்மைகள் இருக்கும். அந்த வகையில் செம்மொழியாகத் தகுதி பெற்றுள்ள தமிழுக்கும் பல தனித்தன்மைகள் உள்ளனன. அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.

 

·         உலகில் பெரும்பாலான மொழிகளில் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமுமே காணப்படுகின்றன. ஆனால் தமிழில் மட்டுமே வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.

·         உலகில் எல்லா மொழிகளிலும் காதல், வீரம், கொடை போன்றவை விளக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை ஒரு கோட்பாடாக விளக்கும் முறை செம்மொழித் தமிழில் மட்டுமே காணப்படுகின்றது.

 

·         குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலப் பாகுபாடு, பெரும்பொழுது - சிறுபொழுது இவை முதற்பொருள் ஆகும். உணவு, தெய்வம் உயிர் வாழ்வன போன்றவை கருப்பொருள் ஆகும். புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் போன்றவை உரிப்பொருள் ஆகும்.

 

·         இதே போன்று புறப்பொருள் பாகுபாட்டில் போரிடும் முறைகள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்திணை எனப் பகுக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இப்பாகுபாடுகள் எல்லாம் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில்காணப்படுகின்றன.

·         இவ்வகையான அகத்திணை, புறத்திணை என்னும் பாகுபாடு உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை என அறிஞர்கள் குறிப்பர். இவற்றைப் போன்றே ஆண்பால் பெண்பால், பலர் பால்,ஒன்றன் பால், பலவின் பால் என்னும் பால்பாகுபடும் உலகில் அறிவியல் அடிப்படையில்

·         வேறு எந்த மொழியிலும் பகுக்கப்படவில்லை எனத் திராவிட மொழியியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் குறிப்பிடுகின்றார்.

·         இவ்வாறு இன்னும் பல தனித் தன்மைகளைப் பெற்றுச் செம்மொழித் தமிழ் விளங்குகின்றது எனலாம்.

 

3. பொதுத் தன்மை

·         மாந்தரினம் தனித்து வாழக் கூடிய ஒன்றன்று. சேர்ந்து வாழக்கூடிய ஒன்றாகும். உலகிலுள்ள சான்றோர் பெருமக்கள் அனைவருமே வறுமைக் கொடுமையைக் கடிந்து பாடுகின்றார்கள். புறநானூற்றுப்புலவர் உணவு கொடுத்தோரை உயிர் கொடுத்தவர் எனக் குறிப்பிடுகின்றார்.

 

நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (புறம். 18:20-21)

 

·         இருப்பவற்றைப் பகுத்துண்டு வாழ்தல் ஆகச்சிறந்த அறம் எனத் திருவள்ளுவர் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, உணவு, உடை, அன்பு பாராட்டுதல் எனப் பல பொதுத் தன்மைகள் செம்மொழித் தமிழில் விளக்கப்பட்டுள்ளன.

 

4. நடுவு நிலைமை

·         உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே எனக் குறிப்பார்கள். பசுவின் கன்று தேரில் அடிபட்டு இறந்ததற்காகத் தன் மகனைத்தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனின் செயலும் தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காக்கத் தன் தசையை அறுத்துத் தராசில் இட்ட சிபிச்சக்கரவர்த்தியின் செயலும் நடுவு நிலைமைக்குச் சிறந்த சான்றுகளாகும்.

 

·         இவ்வகையான நடுநிலைமை பற்றிய சான்றுகள் பழந்தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் நிறையக் காணப்படுகின்றன

 

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி

(திருக். 118)

 

·         இவ்வாறு நடுவு நிலைமை, சாதி, இனம் என்னும் வேறுபாடு இல்லாமை போன்ற உயர்ந்த கோட்பாடுகள் விளக்கப்படுவதைச் செம்மொழித் தமிழ் நூல்களில் காணலாம்.

 

5. தாய்மைத் தன்மை

 

·         இன்று தமிழோடு தொடர்புடைய இருபத்தைந்து மொழிகளைக் கண்டறிந்து, திராவிட மொழிகள் (Dravidian languages) என ஒரு குடும்ப மொழியாகக் குறிப்பிடுகின்றார்கள்.

 

·         தமிழோடு சேர்ந்த இம்மொழிகள் அனைத்திற்கும் முந்தைய மொழியை மூல திராவிடம் (Proto - Dravidian ) எனக் குறிப்பர். இந்த மூலமொழிக் கூறுகள் அனைத்தும் தமிழில் காணப்படுகின்றன. 80 விழுக்காடு மூல திராவிடச் சொற்கள் தமிழில் காணப்படுகின்றன.

 

·         எனவே செம்மொழித் தமிழே திராவிட மொழிகளில் தாய்மைத் தன்மை உடையது என அறிஞர்கள் குறிப்பர். மற்றைய திராவிட மொழிகளில் வடமொழிச் சொற்கள் நிறையக் கலந்திருக்க, தமிழ்மொழி மட்டுமே மூல அமைப்பிலிருந்து மாறாமல் தாய்மைத் தன்மையோடு விளங்குகின்றது என்பது அறிஞர்கள் கருத்தாகும்.

 

 

6. பண்பாடு – கலை

 

·         ஒரு மொழி வளம் பெற்றதாகவும் செம்மொழித் தகுதிப்பாடு மிக்கதாகவும் இருக்குமாயின் அம்மொழி பேசுவோரின் பண்பாட்டுக்கூறுகளும் அவர்களின் இலக்கியங்களில் ஒளி வீசும்.

 

முதல் நாள் போரில் அவள் தந்தை இறந்து போகிறான்; அடுத்த நாள் போரில் அவள் கணவன் வீரமரணம் அடைந்தான். அடுத்தநாள் போர் முரசு ஒலி காதில் விழத் தன் மகன் சிறுபாலகனைப் போருக்கு அனுப்புகிறாள். தலைக்கு எண்ணெய் தடவி, ஆடை உடுத்தி, வேலைக்கையில் கொடுத்து அனுப்புகின்றாள்.

 

வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇ

பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒருமகன் அல்லது இல்லோள்

செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே

(புறம். 279)

 

இவ்வகையான வீரம் மறப்பண்பாடு எனப்படும். பழந்தமிழர்கள் பல்வேறு வகையான இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இருக்கின்றார்கள்.

 

குழல் அகவ யாழ்முரல

முழவு அதிர முரசு இயம்ப

விழவு அறாவியல் ஆவணத்து

(பட். 156-158)

 

·         இவ்வாறு செம்மொழித் தகுதிப்பாடு பெற்றுள்ள தமிழ் மொழியில் பல பண்பாடு கலை தொடர்பான செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

 

7. பிறமொழித் தாக்கம் இல்லாத் தன்மை

 

·         இந்தியா பல குடும்ப மொழிகளைப் பேசக்கூடிய நாடாகும். தொன்மைக் காலத்திலிருந்த நான்கு குடும்பம் சார்ந்த நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன.

 

1. திராவிட மொழிகள்

2. இந்தோ - ஆரியமொழிகள்

3. முண்டா மொழிகள்

4. திபெத்தோ - பர்மிய மொழிகள்

 

·         இம்மொழிக் குடும்ப மொழிகளில் பழங்காலத் தொட்டே தமிழும் சமஸ்கிருத மொழியும் நெருங்கிய தொடர்புடையன. இருப்பினும் இவற்றின் சொல் கொடுக்கல் - வாங்கல் (borrowing) ஒரு குறிப்பிட்ட வகையோடு இருப்பதைக் காணலாம்.

 

·         எழுத்துக்களைத் தவிர்த்துத் தமிழ் எழுத்திலேயே வடசொற்களை எழுத வேண்டும் என்பார் தொல்காப்பியர்.

 

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

(தொல். 884)

 

·         மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நூற்றுக்கணக்கான வடசொற்கள் காணப்படத் தமிழில் குறைவாகவே கடன் வாங்கப்பட்டுள்ளன.

·         பழந்தமிழில் தமிழரின் பண்பாடு, வாழ்க்கையை விளக்கும் நூல்களாகிய சங்க இலக்கியங்கள் மட்டுமே எழுந்தன. இராமயணம், மகாபாரதம் தனி நூல்களாக பிற்காலத்திலேயே தமிழுக்கு வந்தன.

 

·         எனவே தொன்மையான செம்மொழி நூல்கள் அனைத்தும் பிறமொழித் தாக்கம் இன்றியே தோன்றின என்பது குறிப்பிடத்தக்கது.

 

8. இலக்கிய வளம்

 

அக்காலம் முதல் இக்காலம் வரை செம்மொழித் தமிழ் ஒரு

சிறந்த இலக்கிய வளம் பெற்ற மொழியாகும்.

1. தொல்காப்பியம்-1

2. சங்க இலக்கியங்கள்

பத்துப்பாட்டு-10

எட்டுத் தொகை-8

3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-18

4. காப்பியங்கள்

சிலப்பதிகாரம்-1

மணிமேகலை-1

5. பிற நூல்கள்

இறையனார் களவியல்-1

முத்தொள்ளாயிரம்-1

 

·         இவை 41 நூல்களும் செம்மொழித் தமிழ் நூல்களாகும். இவற்றில் தமிழின் இலக்கணம், இலக்கியம், அறம் என அனைத்து வளமும் நிறைந்துள்ளன.

 

9. உயர் சிந்தணை

·         செவ்வியல் தமிழ் நூல்களை ஆராய்ந்து பார்க்கும் போது பழந்தமிழர்களின் பகுத்தறிவுப் பார்வையையும் சிந்தனைகளையும் அறிந்து கொள்ளலாம்.

 

·         மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய தொல்காப்பியம் இன்றைய அறிவியலார் கூறுவது போன்று இந்த உலகம் நிலம், தீ, நீர், காற்று, வானம் ஆகியவற்றால் ஆகியது என்பதைப் பின்வருமாறுகுறிப்பிடுகின்றார்.

 

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்....

(தொல். 1589)

 

·         இன்று கூட உலகம் முழுவதும் உள்ள மதவாதிகள் உலகைக்கடவுள் தான் படைத்தார் எனக் கூறும் போது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியரின் சிந்தனை எவ்வளவு உயர்ந்தது என்பதை அறியலாம். கல்வியே அறிவை வளர்க்கும் அதனை எப்பாடு பட்டாவதும் கற்க வேண்டும் என்பதை,

 

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே

(புறம். 183)

எனப் புறநானூறு கூறும்.

 

யாதும் ஊரே; யாவரும் கேளிர் (புறம் 192) என்னும் புறநானூற்றுக் கருத்தும்,

 

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக். 972)

 

என்னும் திருக்குறள் கருத்தும் பழந்தமிழரின் உயர் சிந்தனையை வெளிப்படுத்தும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் புறநானூற்று அடி ஐக்கிய நாட்டுச் சபையிலேயே பதிக்கப்பட்டுள்ளது என்றால் பழந்தமிழரின் உயர் சிந்தனையை விளக்க வேறு எதுவும் வேண்டியதில்லை.

 

10. பொது மொழிக் கோட்பாடு

 

·         தமிழில் தோன்றிய தொல்காப்பியம் மொழி இலக்கணத்தைப் பொதுத் தன்மையோடு விளக்குகின்றது. பொதுவான மொழிக்கோட்பாடுகள் பரந்து பட்டு எல்லா மொழிப் பயன்பாட்டையும் விளக்குகின்றன.

·         இக்கால மொழியியலார் வியக்கும் வகையில் தொல்காப்பிய எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் மொழியின் இலக்கணத்தை விளக்குகின்றன.

·         இந்த இரண்டு அதிகாரங்களும் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், தொடரிலக்கணம் என்னும் மூன்று இலக்கணங்களை விளக்குகின்றன.

·         தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி விளக்கும் பொது மொழிக் கோட்பாடு இன்றும் மொழி விளக்கத்திற்குப் பெரிதும் பயன்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.

·         தமிழ் 2004இல் செவ்வியல் மொழி என மைய அரசால அறிவிக்கப்பட்டிருந்தாலும் பழங்காலத்திலிருந்தே அது செம்மொழி ஆகும்.

·         தமிழ் தனி குடும்பத்தைச் சார்ந்த மொழி; தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழி; மற்ற மொழிகள் இறைவனையும் புராணங்களையும் போற்றிக் கொண்டிருந்தபோது தமிழ் மண்ணையும் மக்களையும் மட்டும் பாடியது. தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொண்டுள்ளது. உலகோர் வியக்கும் வகையில் பல சிறப்புகளைப் பெற்று உயர்தனிச் செம்மொழியாகத் தமிழ் திகழ்கின்றது.

 

Post a Comment

புதியது பழையவை